2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்று மொபைல் போன் வாங்கிய தாய் – கள்ளக்காதலன் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்று மொபைல் போன் வாங்கிய தாய் – கள்ளக்காதலன் கைது

தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து , அந்தப் பணத்தில் 15,000 ரூபா பெறுமதியான மொபைல் போன் ஒன்றைக் வாங்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் இணைந்து குழந்தையை கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்றுள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, குறித்த குழந்தைக்கு தலசீமியா நோய் இருப்பதாகவும், அவரது 4 வயது மூத்த மகளும் அதே நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளவே குழந்தையை விற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்காக பணம் தேவை எனக் கூறியவர்கள், அந்தப் பணத்தில் கைபேசி வாங்கியது ஏன் என பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, சந்தேக நபர்களால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை.

தாய் மற்றும் கள்ளக்காதலன்: தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் குழந்தையை விலைக்கு வாங்கியவர்: கட்டுநாயக்க, அவரிவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )