
சாகரிகா ரயில் இன்று முதல் மீண்டும் வழமைக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடம் புரண்ட சாகரிகா ரயில்,
இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசாங்க சமரசிங்க தெரிவிக்கையில், வழக்கமான அட்டவணைப்படி இந்த ரயில் இன்று முதல் தடையின்றி இயங்கும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த 24ஆம் திகதி பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா ரயில், வாதுவ ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
இதன்போது ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த ரயிலில் பணியாற்றிய ரயில் சாரதி,ரயில் கட்டுப்பாட்டாளர் ,உதவிச் சாரதி,உதவி ரயில் கட்டுப்பாட்டாளர் ஆகிய நான்கு ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் முடியும் வரை இவர்கள் ரயில் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே சாரதி உள்ளிட்ட ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அதன் அழைப்பாளர் இந்திக தொடம்கொட இது குறித்துப் பேசுகையில்,
“தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்குவதில் இருந்து விலகி இருக்கவும், வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ரயில்களை இயக்கவும் ரயில் சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.” என குறிப்பிட்டார் .

