
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மைத்ரி விக்ரமசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
வாக்குமூலம் அளிப்பதற்காகத் தனது வீட்டிற்கு வருமாறு மைத்ரி விக்ரமசிங்க விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க, சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில், குறித்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளன.

