நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால் தண்டனைக்குரிய குற்றமாகும்  – ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு

நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால் தண்டனைக்குரிய குற்றமாகும் – ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அதிகாரம் உள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 121 வது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் பொது நிதிக்குழு நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழ், இந்தக் குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்படும் அழைப்பை நிராகரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறான மீறல்களுக்கு நாடாளுமன்றத்தினால் அல்லது உயர் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்க முடியும். உயர் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுத் கடன் தவணையொன்றைச் செலுத்துவதற்காக திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளித்தரப்பு ஒன்றின் கைக்குச் சென்றமை தொடர்பில் விசாரணை நடத்தவே செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தம்மால் சமூகமளிக்க முடியாது என அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளில் நம்பிக்கையில்லை என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஹேக்கர் தாக்குதலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், போலியான மின்னஞ்சல் முகவரிகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாகவும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊழல்வாதிகளுக்கு எதிராகத் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக, நிதிக்குழுவின் தலைவர் இந்த விவகாரத்தில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )