
சித்ரா பௌர்ணமி
சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி வானியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஒரு அதிசயமான நாள். வானத்தில் நிலவு அன்று எந்த களங்கமும் இல்லாமல் முழு பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வந்து காட்சி தரும் அற்புதமான நாள் இது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று வருகிறது.
பௌர்ணமி திதி வியாழக்கிழமை (30) இரவு 9.12 மணிக்கு தொடங்கிஇன்று இரவு 10.52 மணிக்கு முடிகிறது.
சந்திரனும் சூரியனும் முழு பலன் பெற்று விளங்கும் இந்த நாளில் இறைவனை வழிபட்டால் வாழ்வில் பெரும் மாற்றங்கள் உருவாகும்.
மற்ற மாதங்களில் வரக்கூடிய பவுர்ணமிகளை சித்ரா பௌர்ணமி நாளில் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்றபடி நிறைய பலன்கள் கிடைக்கும். அதேபோல் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தவிடுபொடியாகும் நாள் சித்ரா பௌர்ணமி தான்.
இந்த நாளில் நாம் தெரியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக நமது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம். குறிப்பாக நம் வாழ்வின் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தரை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் இது.
இவர் ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார். சித்’ என்றால் மனம், ‘அப்தம்’ என்றால் மறைவு என்றும் பொருள்.
மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர், உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம் தலைமைக் கணக்கராக இருப்பவர். அவரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா பவுர்ணமி.
இந்தியாவில் 11 இடங்களில் சித்ரகுப்தருக்கு கோவில் இருந்தாலும் தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் பஸ் நிலையம் அருகே நெல்லுக்கார வீதியில் இவருக்கு தனிக் கோவில் உள்ளது. இங்கு சித்திரகுப்தன் மனைவி சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார். இவளைப் பிரபாவதி என்றும், கர்ணிகை என்றும் சொல்கிறார்கள்.
இக்கோவிலில் மூலவராக அமர்ந்த நிலையிலும், உற்சவராக நின்ற நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார். சித்ரா பவுர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். அன்று காலையில் சித்ரகுப்தருக்கு மகாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். சித்ரா பவுர்ணமி நாளன்று செய்யும் சித்ரகுப்த பூஜை, சித்ரகுப்தரின் அருளைப் பெற்றுத் தரக்கூடியதாகும்.
அந்த நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், கேது கிரகத்தால் விளையும் தீமைகள் ஒடுங்கும். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு வகையான விசேஷ பூஜை முறையை காரணாகமம் சொல்லி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று மேற்கொள்ளும் ஒரு விசேஷ விரதம் சித்ர குப்த விரதம்.
இந்த நாளில் நாம் சாப்பிடும் உணவில் ஒருவேளை உணவிலாவது உப்பை தவிர்த்தால் தீராத கர்ம வினைகள் கூட தீரும் என்பது ஐதீகம். அதேபோல் சித்ரகுப்தருக்கு உப்பு இல்லாத தயிர் சாதம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் அன்று பசுவின்பால், தயிர், நெய் சேர்க்காமல் இருந்தால் நல்லது. சாதாரணமாக பூஜைகளில் பெரும்பாலும் பசும் பாலையே பயன்படுத்துவது வழக்கம். எமதர்மராஜனுடைய வாகனம் எருமை என்பதால், இந்த பூஜையில் எருமைப்பால் விசேஷம்.
எமதர்மராஜன் தென்திசைக்கு அதிபதி என்பதால், இந்நாளில் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்கள் தென்புறவாசலை அடைப்பதுபோல் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. மாக்கோலம் போடும்போது தெற்குப் பக்கத்தை மூடிவிட்டு மற்ற இடங்களில் கோலமிட வேண்டும்.
மாக்கோலத்தில் தெற்கு நோக்கிய தேரில் எழுத்தாணி ஓலை இவற்றைக் கையில் கொண்ட சித்திரகுப்தர் திருவுருவம் வரைந்து கொள்ள வேண்டும். அதன் முன் ஒரு சிறு பித்தளை அல்லது வெள்ளி அல்லது தங்கக் குடத்தில் நூல் சுற்றிவைக்கவேண்டும். அவர் கையில் பென்சில், பேனா, காகிதம் ஆகியவற்றை வைக்க வேண்டும். வழிபட்டு முடிந்ததும் சித்திரகுப்தன் கையிலுள்ள பேனா, பென்சில், காகிதம் போன்றவைகளை தானமாகத் தந்துவிட வேண்டும்.
ஏழை, எளியவருக்கு குடை அல்லது செருப்பு தானம் செய்வது உங்கள் முன்னோர்களுடைய ஆசையை நேரடியாக பெற்றுத்தரும். அதேபோல் அன்றைய தினம் ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்வது புண்ணியத்தைத் தரும்.
இரவு நிலவுக்கு கீழே நின்று நீங்கள் செய்யும் பிராயசித்த பிரார்த்தனை உங்களுடைய பாவக்கணக்கையே மாற்றி எழுதும் வல்லமை கொண்டது. அன்று நிலவு மிகவும் பிரகாசமாக இருப்பதால் மனத்தெளிவு மற்றும் நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கும். அன்றைய தினம் முழுவதும் விரதம் அனுஷ்டித்து இரவு நிலவு தரிசனம் செய்த பின் உணவருந்தவேண்டும்.
இந்த நாளில் செய்யப்படும் தானங்கள் பல மடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்பது ஐதீகம். எனவே உங்களால் முடிந்த தான தர்மங்களை கண்டிப்பாக செய்வது நல்லது. அன்றைய தினம் பொய் பேசுதல், சூதாட்டம், பிறரை நிந்தித்தல், தகாத சொற்களால் பேசுவது, அசைவ உணவு சாப்பிடுவது, போதை வஸ்துக்களை சாப்பிடுவது, மது அருந்துவது, மாலையில் உறங்குதல் போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது.
சித்திரகுப்தர் கர்மாவின் கணக்காளர் மட்டுமல்ல. அவர் நம் வாழ்வின் வழிகாட்டி. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை விதைப்போம். நம் வாழ்வின் கணக்கு புத்தகம் புண்ணியங்களால் நிறையட்டும். அன்றைய தினம் சித்திரைகுப்தரிடம் இறைவா தெரிந்தும், தெரியாமலும் செய்த பிழைகளை மன்னித்து இனி என் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திரு என்று நாம் வைக்கும் ஒரு நிமிடம் மவுன பிரார்த்தனை ஆயிரம் பூஜைகளுக்கு சமமானது.

