
இலங்கை – தென்கொரியா இடையே 267 மில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே, சுமார் 267 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 18 பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி கடன்களை உள்ளடக்கிய கடன் மறுசீரமைப்பு திருத்த ஒப்பந்தங்கள் உத்தியோகபூர்வமாக பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 28, 2026 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற 2026 EDCF கொள்கை கலந்துரையாடலின் போது இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.SOS
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலானது, தற்போதைய ஒத்துழைப்புகளை மீளாய்வு செய்யவும், கடன் தொடர்பான மாற்றங்களை மேற்கொள்ளவும் மற்றும் இலங்கைக்கு கொரியா வழங்கும் எதிர்கால அபிவிருத்தி உதவிகளின் திசையை தீர்மானிக்கவும் ஒரு தளமாக அமைந்தது.
இதன்போது இலங்கையின் தேசிய அபிவிருத்தித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பின் தற்போதைய நிலை குறித்து தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளால் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2026 முதல் 2030 வரையிலான காலப்பகுதிக்கான சர்வதேச அபிவிருத்திக்கான செயல்பாட்டுத் திட்டங்களை கொரியத் தரப்பு முன்வைத்தது.
தற்போது EDCF கடன்கள் மூலம் நிதியளிக்கப்படும் பல முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
2018 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட EDCF ஏற்பாட்டை (Framework Arrangement) நீடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது கொரியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைக்கால நிதி உதவிக்கான அடிப்படையாகும்.
கொரியக் குழுவிற்கு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (Exim Bank of Korea) பணிப்பாளர் டேஹீ கிம் (Daehee Kim) ஆகியோர் தலைமை தாங்கினர்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமை தாங்கியதுடன், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

