வித்யா கொலை வழக்கு – சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை உறுதி

வித்யா கொலை வழக்கு – சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை உறுதி

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மேல்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது.

தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு அறிவிக்கப்பட்ட போது, சிறையிலிருந்த பிரதிவாதிகள் ஸூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயதுடைய மாணவியான சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த யாழ். மேல்நீதிமன்றம், சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராகவே பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேன்முறையீட்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு பிரதிவாதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )