தனியார் பஸ் துறை நெருக்கடிக்கு மின்சாரப் பேருந்துகளே தீர்வு -கெமுனு விஜயரத்ன

தனியார் பஸ் துறை நெருக்கடிக்கு மின்சாரப் பேருந்துகளே தீர்வு -கெமுனு விஜயரத்ன

இலங்கையின் தனியார் பேருந்து துறை எதிர்கொள்ளும் கடுமையான நிதி மற்றும் தொழில்நுட்ப நெருக்கடிகளுக்கு மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவதே ஒரே நிலையான தீர்வாகும் என்று கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பேருந்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக Amcot நிறுவனம் மற்றும் லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 100 மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு நகரப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். இவை 32 இருக்கைகளைக் கொண்ட சொகுசு பேருந்துகளாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி இவை சார்ஜ் செய்யப்படும். பேட்டரிகளுக்கு 7 வருட உத்தரவாதம்வழங்கப்படும்.
முதற்கட்டமாக ஹொரண – கொழும்பு பாதையில் இவை இயக்கப்படும்.
இப்பாதையில் சுமார் 200 சார்ஜ் செய்யும் இடங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் எடுக்கும். அதன் மூலம் 350 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும். இது ஹொரண மற்றும் கொழும்புக்கு இடையே சுமார் 6 பயணங்களை மேற்கொள்ள போதுமானது. VAT வரி 20% ஆக அதிகரித்தமை மற்றும் டயர்களின் விலை உயர்வு காரணமாக பேருந்து உரிமையாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளால் டீசலின் தரம் குறைந்துள்ளதாக கெமுனு விஜயரத்ன குற்றம் சாட்டினார்.

டீசலில் கந்தகத்தின் அளவு சட்டபூர்வ எல்லையை விட (500 PPM) அதிகமாக 3000 PPM வரை உயர்ந்துள்ளதாகவும், இது பேருந்து இயந்திரங்களை அரிப்படையச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Amcot நிறுவனத்தின் தலைவர் ஹெர்பி சில்வா தெரிவிக்கையில், அடுத்த ஒரு வருடத்திற்குள் ஹொரணையில் உள்ள தொழிற்சாலையில் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்க இலக்கு வைத்துள்ளதாகக் கூறினார்.

இதன் மூலம் இலங்கையின் பேருந்து தேவையில் 30% ஐ உள்ளூரிலேயே பூர்த்தி செய்ய முடியும் என்றும், எதிர்காலத்தில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )