தபால் திணைக்களத்திலிருந்து 626,000 டொலர்களை இரண்டு முறை தவறான தரப்பிற்கும் மாறியுள்ளமை குறித்து                  CID நீதிமன்றத்தில் முறைப்பாடு

தபால் திணைக்களத்திலிருந்து 626,000 டொலர்களை இரண்டு முறை தவறான தரப்பிற்கும் மாறியுள்ளமை குறித்து CID நீதிமன்றத்தில் முறைப்பாடு

இலங்கை தபால் திணைக்களம், அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகப்படியான நிதியை இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தபால் திணைக்களம் இந்த நிதியை தவறான தரப்பினருக்கு அனுப்பியுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்:

உலகளாவிய ரீதியில் தபால் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் வங்கித் தகவல்களை Universal Postal Union வழங்குகிறது.

ஆனால், இந்த கொடுக்கல் வாங்கலின் போது, அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு மாறாக வேறொரு மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பாடல் பேணப்பட்டுள்ளது.

அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட வேண்டிய பணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து 2023 ஜூன் முதல் 9 போலி மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன.

அதில் 3 மின்னஞ்சல்களுக்கு தபால் திணைக்களம் பதிலளித்துள்ளது.
2025 பெப்ரவரி 19: 435,864 அமெரிக்க டொலர்களும்
2025 அக்டோபர் 16: 190,891 அமெரிக்க டொலர்களுமாக
மொத்தமாக 626,755 அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிற்குச் சென்றுள்ளது.

இந்த பணம் யாருடைய கணக்கிற்குச் சென்றது என்பது குறித்து நீதவான் பசன் அமரசேன கேள்வி எழுப்பிய போது, இதுவரை அந்த நபர் அல்லது தரப்பு அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் தண்டனைச் சட்டம், கணினி குற்றச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பை ஆய்வு செய்ய இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு அனுமதி வழங்கினார்.

வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )