
கடைக்குள் புகுந்த பெண் கொள்ளைக் கும்பல் -ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் கொள்ளை
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்தத் துணிகரக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில், ஒரு ஆணும் பெண்ணும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றினை வாங்குவது போல கடைக்குள் நுழைந்துள்ளனர். அதற்காக 45,000 ரூபா பணத்தை காசாளரிடம் வழங்கியுள்ளனர்.
தொலைக்காட்சிப் பெட்டியைப் பரிசோதித்து வழங்குவதற்குத் தாமதமாவதாகக் கூறி, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிறிது நேரத்தில், அந்தப் பெண்ணும் ஆணும் மேலும் 6 பெண்கள் மற்றும் சில ஆண்களுடன் மொத்தம் 10 பேர் கொண்ட குழு ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்துள்ளனர்.
அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கிய அக்குழுவினர், பையில் வைக்கப்பட்டிருந்த 1,309,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் அனைவரும் தொடருந்து வீதி வழியாகக் கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

