
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தால் மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அச்சமும் கவலையும் நிலவுவதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக மீண்டும் தாயகத்திற்குக் கொண்டு வர தேவையான தூதரக அழுத்தங்களை இலங்கை அரசிடம் இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

