
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பில்இந்தியா சென்றுள்ள இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பிற்கு இணங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (SLWPC) பிரதிநிதிகள் குழுவினர் தற்போது இந்தியாவில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நிலவும் நீண்டகால நாடாளுமன்ற, கலாசார மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இதன்போது பெண் வலுவூட்டல், நாடாளுமன்ற விவகாரங்கள், சமூக மேம்பாடு மற்றும் பாலின உணர்திறன் கொண்ட ஆட்சி முறைமை தொடர்பான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
பிரதிநிதிகள் குழுவினர் இந்திய நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் கலந்துரையாடினர்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இந்திய மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி மற்றும் அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்த குழுவினர், பெண் வலுவூட்டல் திட்டங்கள், சிறுவர் நலன்புரி மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
டெல்லி பொலிஸ் ஆணையாளரைச் சந்தித்த பிரதிநிதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
பெண்களால் வழிநடத்தப்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்புடன் குழுவினர் கலந்துரையாடினர்.
இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்திற்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) ஏற்பாடு செய்துள்ள விரிவான வேலைத்திட்டத்தில் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.
இதில் இந்திய நாடாளுமன்ற முறைமை, குழு முறைமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்த அமர்வுகள் உள்ளடங்கியுள்ளன.
தொடர்ந்து வரும் நாட்களில், டெல்லி முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதுடன், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்தக் குழுவில் அமைச்சர் சரோஜா போல்ராஜுடன்
ரோகிணி குமாரி விஜயரத்ன, ஓஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சமிந்தானி கிரியெல்ல, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி ஏ.எம்.எம். ரத்வத்தே, சட்டத்தரணி ஹசார லியனகே, அம்பிகா சாமுவேல், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகமும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர மற்றும் நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

