அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; விசாரணை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; விசாரணை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை வேளையில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் சென்றதாகக் கூறி அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சூட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (12) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி 6க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என தெரிவித்தனர்.

எனவே, விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் இரு தரப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய விசாரணையின் போது பல பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றில் சமூகமளித்திருந்தனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் உள்ளிருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ஆனால் சம்பவம் நடந்த தினத்தில் தடயவியல் பொலிஸாரால் மீட்கப்படாத வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை எவரும் கைது செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )