“ஊழலற்ற அரசியல்” என முழக்கமிட்ட விஜய்க்கு எதிராக வருமானத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு

“ஊழலற்ற அரசியல்” என முழக்கமிட்ட விஜய்க்கு எதிராக வருமானத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு

வருமானத்தை மறைத்த குற்றச்சாட்டில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2015-16ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இறுதி விசாரணைக்கு வந்தபோது,

விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆறு ஆண்டுகள் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சீனிவாஸ், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தொடர்ந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )