
உணவு பொதியில் புழு ; உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய உணவு பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த சட்டக்தரணி சம்பவதினத்தன்று மதிய உணவு பொதியினை வாங்கி கொண்டு தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு இருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து புழு உணவு பொதியுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக சட்டத்தரணி முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனையை செய்ததை அடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.
இவ்வாறு மீட்டகப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவு பொதியில் புழு இருந்தமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு அமைய தனித்தனியாக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் 27ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் குறித்த உணவு விற்பனை செய்துவரும் கடையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தயாரித்தமை மற்றும் உணவு தயாரிப்பதற்காக பொருட்களை வைத்திருந்தமை சுகாதார சீர்கேடாக உணவுகளை கையாண்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அதன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரை தண்டப் பணம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

