
ஆற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஆற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) காலை வேளையில் வீட்டிலிருந்து தனியாக வெளியேறிய சிறுவன், ஆற்றங்கரை பகுதியை நோக்கி சென்றுள்ளார். அவ்வேளை, ஆற்றின் கரையில் நின்றபோது தவறி நீரில் விழுந்துள்ளார்.
சிறுவன் வீடு திரும்பாமல் இருப்பதைக் கவனித்த பெற்றோர்கள், அருகாமையிலுள்ள உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்தை அண்மித்து பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெரா காட்சிகளை பார்வையிட்டபோது சிறுவன் தனியாக ஆற்றங்கரையை நோக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், பிரதேச மக்கள் ஆற்றில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். தேடுதலின்போது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

