
உக்ரேனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார்
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரேன் – ரஷ்யா போர் நீடித்து வருகின்றது.
உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா இராணுவ வீரர்களை அனுப்பி உதவி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷ்யாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார்.
அப்போது அவர் உக்ரேனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “உக்ரேனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய இலட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரேன் சேருவதை தவிர்க்க வேண்டும்.
எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து இராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” என தெரிவித்துள்ளார்.

