
காசாவில் தற்காலிக போர்நிறுத்தம்
காசாவின் மூன்று பகுதிகளில் இன்று (27) முதல் நாளாந்தம் 10 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், நிவாரணப் பணியாளர்கள் பாதுகாப்பாக செல்வதற்கும் அனுமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த தற்காலிக போர் நிறுத்தம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.
பல மாதங்களாக கடுமையான போர் மற்றும் முற்றுகை கட்டுப்பாடுகள் காரணமாக பஞ்சத்தின் விளிம்பில் இருக்கும் காசாவின் பொதுமக்களுக்கு உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதை எளிதாக்குமாறு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக போர்நிறுத்த மண்டலங்கள் மனிதாபிமான நோக்கங்களுக்காக மட்டுமானது எனவும் போர்நிறுத்தப்படும் நேரங்கள் மற்றும் பகுதிகளுக்கு வெளியே இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

