
கல்வித் துறை சார்ந்த முறைப்பாடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் -பிரதமர் ஹரிணி
பாடசாலைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை துல்லியமாகவும் திறமையாகவும் விசாரிக்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவுக்கு, தேவையான அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அதனை வலுப்படுத்துவதனூடாக தற்போதுள்ள விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவிறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சார்பாக பத்தாவது நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணியிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் பாடசாலைகளை நிரந்தர இடங்களில் நிறுவுதல், விசேட தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு தொழிற்கல்வி அணுகலை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக நுழைவு , ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனம் மற்றும் இடமாற்றக் கொள்கையை முறையாக செயல்படுத்துதல் உள்ளிட்ட கல்வி சீர்திருத்தம் தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர் நியமனங்களை வழங்கும்போது தேவைகளையும், காலியிடங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என்றும், கல்வி முறையில் சிக்கல்கள் ஏற்படாத வகையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறை தொடர்பாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை உடனடியாக விசாரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ,துறைக்கு பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், விசாரணைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதன்போது கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட துணைக் குழுக்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களையும் சம்பந்தப்பட்ட குழுத் தலைவர்கள் முன்வைத்தனர்.

