
Zoom தொழிநுட்பம் ஊடக வழக்கில் ஆஜரான ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom தொழிநுட்பம் ஊடக வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.
இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று (26) பிற்பகல் மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட நிலையில் ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

