
அதுரலியே ரதன தேரருக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றதற்காக, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி, அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் தடைப்பட்ட இந்த விசாரணை, கொழும்பு குற்றப் பிரிவின் புதிய இயக்குநராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக லொக்குஹெட்டி நியமிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது
தொடர்ந்து அதுரலிய ரத்தன தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 10 இடங்களில் தேடிவந்தனர்.
தேடப்பட்ட இடங்களில் தேரர் வந்ததற்கான எந்த தகவலும் இல்லாததால், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய தினம் அதுரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் அவரை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

