
டயானா கமகே வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்கள் சமர்ப்பித்தமை மற்றும் சரியான விசாவின்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, நீதிமன்றம் பிரதிவாதி டயானா கமகேவிடம் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டியபோது, அவர் தாம் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க தரப்பு சட்டத்தரணி அகிலா தர்மதாது அவர்களின் வழிநடத்தலின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஹன்சிகா குமாரசிறி சாட்சியமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜூலை 14ஆம்திகதி முதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி வரை உரிய விசாவின்றி இலங்கையில் தங்கியிருந்ததோடு, வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 7 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

