
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்த Clean Sri Lanka செயற்படுத்தும் Beyond Recovery முன்னோடித் திட்டம் பதுளையில் ஆரம்பம்
‘டித்வா’ சூறாவளியால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Beyond Recovery’ நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி திட்டம் நேற்று (10) பதுளை மாவட்டத்தில் ஆரம்பமாகியது.
மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மொரஹெல மகா வித்தியாலயம் மற்றும் கனுகொல்ல சுமனாராம விகாரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் ‘Beyond Recovery’ திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது, 118 குடும்பங்களைச் சேர்ந்த 279 பேர் மொரஹெல மகா வித்தியாலயத்திலும், 101 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் கனுகொல்ல சுமனாராம விகாரையிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
பௌதிக ரீதியான உதவிகளைத் தாண்டி, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டெழுவதற்குத் தேவையான தைரியத்தையும் உள நிவாரணத்தையும் வழங்குவதே ‘Beyond Recovery’ வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும். அதன்படி, தன்னார்வக் கலைஞர்கள் குழுவின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விசேட இசை நிகழ்ச்சி, குழந்தைகள் மாத்திரமன்றி, பெரியவர்களின் உள்ளத்தை மேம்படுத்தி, அவர்களுக்குள் புது உத்வேகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது.
மேலும், நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களால் ‘Clean Sri Lanka’ செயலகத்திற்கு கையளிக்கப்பட்ட பாடசாலைப் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் குழந்தைகளுக்குப் பரிசுகளாக வழங்கப்பட்டன.
உள ஆரோக்கியம், குழந்தை உளவியல், சமூக சுகாதாரம் மற்றும் படைப்புத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வளவாளர்கள் மற்றும் வெளிநாட்டு தன்னார்வலர்கள் குழுவும் இந்த திட்டத்தில் பங்கேற்றதுடன், அவர்கள் குழந்தைகளுக்கான பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
பதுளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘Beyond Recovery’ வேலைத்திட்டம், இன்றும் (11) பல்வேறு பாதுகாப்பு மையங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

