
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 861 பேர் கைது
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பொலிஸார் நேற்று (11) நாளொன்றிலேயே பல்வேறு சோதனைகள் மற்றும் திடீர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில்,
- 311 கிராம் ஹெரோயின்
- 758 கிராம் ஐஸ்
- 93 கிலோ 12 கிராம் கஞ்சா
- 40,874 கஞ்சா செடிகள்
- 29 கிராம் ‘குஷ்ரக’ போதைப்பொருள்
- 27 கிராம் ஹஷீஷ்
- 72 கிராம் மதனமோதகம்
- 301 போதை மாத்திரைகள்
- 813 கிராம் மாவா
எனப் பல்வேறு வகை போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 861 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 883 சோதனைகளில், போதைப் பழக்கத்தில் சிக்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 26 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

