
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள் எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது – அதன்படி, 700 பில்லிய்ன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தின்போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிக இழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம் – அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கடுமையான நிதி ஒழுக்கம் இந்த கடினமான நேரத்தை எதிர்கொள்ள எங்களுக்கு தைரியத்தை அளித்தது.
கூடுதலாக ஒதுக்கப்படும் 500 பில்லியன் நமது கடன் எல்லையை அதிகரிக்காமல் பயன்படுத்தப்படும்.
கூடுதலாக 500 பில்லியன் ரூபாய் சந்தைக்கு வரும்போது பணவீக்கம் மற்றும் மாற்று விகிதத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்.
ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்வதே எமது கொள்கை
அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இதுபோன்ற குறைநிரப்பு பிரேரணை அவசியம் என்பதை இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும்
இந்த 500 பில்லியன் காரணமாக ஏப்ரல் மாதத்திற்குள் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று ஒரு கருத்தாடல் நடக்கின்றது.
இவ்வளவு பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பொருளாதாரம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்ற சிலரின் கூற்றுகள் குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் நிதி ஒழுக்கத்துடனும், குறிக்கோளுடனும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அரசாங்கம். 2025 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டு பொருளாதாரத் துறையில் பல முக்கியமான சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும், நீண்ட காலமாக, திறைசேரிக் கணக்கு வங்கி மேலதிகப் பற்றுடனே இருந்தது. சில நேரங்களில் இந்த வங்கி மேலதிகப் பற்றுகளுக்கு 33%, 36% வட்டி செலுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், வங்கி மேலதிகப் பற்று180 பில்லியனாக இருந்தது. 2019 இல், அது 274 பில்லியனாக இருந்தது. 2020 இல், இது 575 பில்லியனாகவும், 2021 இல், அது 821 பில்லியனாகவும் இருந்தது. அதாவது அரசாங்கத்தின் வங்கிக் கணக்கில் 821 பில்லியன் மேலதிகப் பற்று இருந்தது. ஆனால் 2025 நவம்பர் மாதத்திற்குள், நமது அரசாங்கத்தின் திறைசேரிக் கணக்கின் நேர்மறை மதிப்பு 1202 பில்லியனாக இருந்த்து. இது கடந்த காலங்களுடன்
ஒப்பிடும்போது 02 டிரில்லியன் அதிகமாகும். இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகும்.
அத்தகைய நிதி கையிருப்பு இல்லாமல், இன்று இந்த 500 பில்லியனை ஒதுக்க முடியாது. எனவே, இந்த 500 பில்லியனை நிறைவு செய்ய வேறு பல உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இரண்டாவதாக, நமது வருமானத்தை எடுத்துக் கொண்டால், 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் மிக உயர்ந்த அரச வருமானமாக 15.9% 2025 ஆம் ஆண்டில் ஈட்டியுள்ளது. மூன்றாவதாக, 1977 ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையாக 4.5 வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நாம் பதிவு செய்துள்ளோம். மேலும், வரவுசெலவுத்திட்ட இலக்குகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இந்த நாட்டின் வரலாற்றில் வருமான இலக்குகளை மீறிய ஆண்டாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.
இந்த ஆண்டு, நாங்கள் 4960 பில்லியன்களை எதிர்பார்த்தோம், 2025 டிசம்பர் 15, க்குள், நாங்கள் 5125 பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். கடன் எல்லை அதிகரிக்காமல் வைத்திருக்கவும் முடிந்தது. 2026 வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தபோது, 3800 பில்லியன் கடன் எல்லையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினோம், ஆனால் வரவுசெலவுத்திட்டம் மூலம் மேலும் 60 பில்லியன்களைக் குறைத்து 3740 பில்லியன் கடன் எல்லையை பேணுகிறோம்.
எங்கள் கடன் எல்லை அதிகரிக்காமல் இந்த மேலதிக 500 பில்லியனை நாங்கள் பயன்படுத்துகிறோம். அது மிகவும் முக்கியமானது. எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு, வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் கடன் எல்லைகளுக்குள் இருக்க முடிந்துள்ளது.
மேலும், 1950 இற்குப் பின்னர், எங்கள் முதன்மைக் கணக்கில் 06 முறை மட்டுமே மேலதிகம் ஏற்பட்டுள்ளது. 74 ஆண்டுகளில், முதன்மைக் கணக்கில் 06 முறை மேலதிகம் ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த 06 முறையும் 1% க்கும் குறைவாகவே உள்ளன. ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, இந்த ஆண்டு எங்கள் முதன்மைக் கணக்கு மேலதிக 3.8% ஆக பதிவாகியுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டில் இருந்து மிக அதிகமான பணம் அனுப்புதல் இந்த ஆண்டு பெறப்படுகிறது. சுற்றுலா வருமானம் 2018 ஆம் ஆண்டில் சுமார் 3.8 பில்லியனாக இருந்தது. அதை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எமது பொருட்கள்
மற்றும் சேவை ஏற்றுமதிகளிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கிறோம். இந்த தரவுகளிலிருந்து, மிகவும் வலுவான நிதி முகாமைத்துவம் மற்றும் இலக்கு சார்ந்த பணிகளின் விளைவாக இந்த வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம்.
ஆனால் பெரிய அதிர்ச்சிகளைத் தாங்கும் பொருளாதாரம் நம்மிடம் இருக்கவில்லை. ஒரு சிறிய அல்லது தவறான முடிவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளாதாரமே நம்மிடம் இருந்தது. எனவே, கடந்த 14-15 மாதங்களாக, நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, எந்தத் தவறும் செய்யாமல் மிக நுட்பமான அம்சங்களைக் கூட ஆய்வு செய்து, பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளோம். யாரும் அதை மறுக்க முடியாது, ஆனால் அவ்வாறான பொருளாதார ஸ்திரத்தன்மையில்தான் நாம் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம்
இவ்வளவு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான நிலையில் இல்லாவிட்டால், இதை எதிர்கொள்ள முடியாது. இப்போது நாம் அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைதான் இதை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் நமக்கு அளித்துள்ளது.
ஆனால், இத்தகைய பாதிப்பை தாங்கும் அளவுக்கு இந்தப் பொருளாதாரம் வளரவில்லை என்பது நமக்குத் தெரியும். வீழ்ச்சி அடைந்த நாட்டை படிப்படியாக மீண்டும் கட்டியெழுப்பும்போது, நமது பொருளாதாரத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பாதிப்பைத் தணிக்கத் தேவையான மிக நுட்பமான தலையீட்டை வழங்குவதன் மூலம் இந்தப் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும்.
ஆனால் ஒரு பொருளாதாரம் என்பது ஒரு கஞ்சனைப் போல எல்லாவற்றையும் குவித்து செல்வத்தைக் குவிப்பது அல்ல. ஒரு பொருளாதாரம் என்பது அதிலிருந்து ஏதேனும் நன்மை கிடைக்குமானால், அந்த நன்மை மக்களுக்குத் திரும்ப செல்ல வேண்டும் என்பதாகும்.
இல்லையெனில், திறைசேரியில் டிரில்லியன் கணக்கான மிகுதி இருப்பதாகச் சொல்வதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, பொருளாதாரத்தில் நாம் அடையும் ஒரு சிறிய வெற்றி என்றாலும், அந்த வெற்றி மக்களுக்கு செல்ல வேண்டும்.
எனவே, இந்த அனர்த்த சூழ்நிலையில், மக்களுக்கு உதவி வழங்க நம்மிடம் இருந்த 1.2 டிரில்லியன் கையிருப்புக்களை நாம் பயன்படுத்த வேண்டும். அதை நாம் கைவிட மாட்டோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரிய கரண்டிகளில் பகிர்ந்து கொண்ட வரலாறு நம் நாட்டில் உள்ளது. வீடுகள் எரிக்கப்பட்ட பிறகு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்கிய முறை நியாயமானதா? இந்த நாட்டில் எப்போதும் தாம் பெரிய பங்கைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முன்னுதாரணமும் உள்ளது. அவர்கள் சிறிய கரண்டிகளில் மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு பணத்தை பெரிய கரண்டிகளால் விநியோகிக்க, நாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைக்கவில்லை. மக்களுக்கு நியாயமான நன்மைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே, இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வர மக்களுக்கு நியாயமான உதவிகளை வழங்க நாங்கள் தலையிட்டுள்ளோம்.
இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்கவும், நிலையான வாழ்க்கையை நடத்தவும் தேவையான ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பதே எங்கள் கொள்கை அணுகுமுறை. அதற்காக தான், நாங்கள் ரூ. 500 பில்லியன்களை எதிர்பார்க்கிறோம். அதன்படி, மொத்த ஒதுக்கீடுகளாக 700 பில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளோம். இது குறித்த மதிப்பீட்டைக் கொண்ட அறிக்கையை உலக வங்கி வரும் திங்கட்கிழமை எங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலிருந்து சேதத்தின் மொத்த அளவைக் காணலாம்.
ஆனால் இங்கே நாங்கள் கவனம் செலுத்தும் சில விடயங்கள் உள்ளன. கூடுதலாக 500 பில்லியன் சந்தைக்கு வரும்போது பணவீக்கத்தில் ஏற்படும் தாக்கத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் செயல்திறனைக் கொண்டுவர வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் வளர்ச்சியை அடைவதற்கு இந்தப் பணத்தில் கணிசமான தொகையை நாம் செலவிட வேண்டும்.
மேலும், 500 பில்லியன்கள் சந்தைக்கு வரும்போது, டொலர்களுக்கான தேவை ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் எதிர்பார்த்த டொலர் வருமானத்தை விட கூடுதல் டொலர் வருமானத்தை ஈட்ட வேண்டும். இல்லையெனில், மாற்று விகிதத்தில் தாக்கம் ஏற்படும். அதைத் தடுக்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் டொலர் உடனடி உதவியை எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் சபை இன்று கூடுகிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

