
இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இந்திய Maan Pharmaceuticals நிறுவனம் கோரிக்கைஅதற்கான செலவுகளையும் ஏற்கத் தயார் என அறிவிப்பு
இலங்கையில் அண்மையில் தடை செய்யப்பட்ட இந்திய மருந்து நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) ,தமது தயாரிப்பான “ஒன்டன் செட்ரான்” மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் (International accredited laboratory) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA), அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு (MSD) ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
இலங்கையில்இந்த மருந்து பயன்பாட்டினால் பாதக விளைவுகள் ஏற்பட்டதாக சர்ச்சைகள் ஏற்பட்டதுடன் இது சர்வதேச ரீதியிலான பிரச்சனையாக தோற்றம் பெற்றமையால் இதன் குறித்து பரிசோதிப்பதற்காக ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார்.
பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கையில் பயன்பாட்டிலிருந்து ஒன்டன்செட்ரான், மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வகையான ஊசி மருந்துகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

