
தனியார் காணி விடுவிக்கக் கோரி தையிட்டியில் போராட்டம் ; ஐவர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முன்னிட்டு, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காக சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதையும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள பதவி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விகாரை முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாதென பெயர் குறிப்பிட்டு தடையுத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் விகாரையை அண்மித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் அமைதியின்மை நிலவியது.
போராட்டக்காரர்கள், இது அமைதிவழியான போராட்டம் என்றும், பொதுமக்கள் அமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர். விகாரைக்குள் நுழைவதற்கோ அல்லது சேதம் விளைவிப்பதற்கோ முயற்சி எடுக்கப்படவில்லை எனக் கூறி, விகாரைக்கு செல்லும் வீதியை மறித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையால் போராட்டக் களத்தில் சில நேரங்களில் பதற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதீபன்

