
வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட தடை
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக, வரவுள்ள பொதுத்தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்கேற்பதற்கு நடைமுறை ரீதியாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ளது.
இந்தத் தடைக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதனுடன் தொடர்பாக, அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு விருப்பமான அரசை அமைக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

