
காலி மாநகர சபையின் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது
காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தியதுடன், குற்றவியல் பலாத்காரம் பயன்படுத்தி அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், காலி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவர்களை இன்று (31) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) மாநகர சபை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன், கடந்த வரவு–செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றை முன்னிட்டு, சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சபைக்குள் நடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டதுடன், மாநகர மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னர் குழு நிலை விவாதத்தை அறிவித்த தருணத்தில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நீர் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், மாநகர மேயர் சபையை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். அந்த இடைவேளையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

