
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கூடியது
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (07) கௌரவ ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு நிதி வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.
மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் இன்னும் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.
மேலதிக நிதியை வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கு முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்கான முறையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வணிகத்தையும் பதிவு செய்வதற்கான பொறிமுறையின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து வர்த்தகச் சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, கடந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதேபோன்று, அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

