
மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரானில் மரண தண்டனை
இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட அலி அர்தெஸ்தானி என்ற நபருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஈரானின் உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, அலி அர்தெஸ்தானி பணம் பெற்றுக் கொண்டு மொசாட் அமைப்பிற்கு பல்வேறு ரகசிய தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அலி அர்தெஸ்தானி, இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததை ஒப்புக்கொண்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான சன்மானமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணமும், பிரிட்டன் விசாவும் வழங்கப்படவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, ஈரானில் அரசியல் மற்றும் தேச விரோத வழக்குகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்தும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

