ஈரானில் இணைய சேவை முடக்கம்

ஈரானில் இணைய சேவை முடக்கம்

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு 1.42 மில்லியன் ரியால் என்ற அளவுக்கு அதன் மதிப்பு சரிந்தது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அதிகரிக்கும் பணவீக்கம், மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தொடர்ச்சியான போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்து, போராட்டங்கள் வன்முறையாக மாறின. இந்நிலையில், வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில், ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. மேலும், நாட்டில் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )