
குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு
நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் நேற்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் தொழிலாளர்கள் குழுவாக இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று கொத்தி கலைத்ததாகவும், அதனால் குளவிகள் சிதறி அருகில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில், நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 78 வயதுடைய பெண் ஒருவர் கடுமையாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

