
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு வழங்க உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை, 2026 ஜனவரி 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் ஆரம்ப 06 மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர் அனைத்து தொடர்புடைய தரப்பினருடனும் ஆலோசனை மேற்கொண்டு, குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கு ஏற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை உறுதி செய்வதற்காக, அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550/- வரை உயர்த்துவதுடன், வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2026 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.
இந்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக, 2026 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 5,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு செலுத்தும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி 01 முதல் 06 மாத காலத்திற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக வழங்குவதற்கும், அதன் பின்னர் உரிய ஆலோசனைகளின் அடிப்படையில், அந்தக் கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த நடைமுறையின் கீழ், தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

