தென்கொரியாவில் வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

தென்கொரியாவில் வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

தென்கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காகத் தகுதி பெற்று, வேலை ஒப்பந்தத்தை எதிர்பார்த்து இணையத்தளத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இரண்டாம் ஆண்டிற்கான பதிவின் போது இதுவரை கட்டாயமாக்கப்பட்டிருந்த இரண்டாவது மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது இனி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான அறிவிப்பை கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய தீர்மானம் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொழித் தேர்ச்சிப் பரீட்சை உள்ளிட்ட தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், இணையத்தளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் முதன்முறையாக மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டும்.

அந்தப் பரிசோதனையில் சித்தியடையும் பணியாளர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.

இணையத்தளத்தில் விபரங்கள் உள்ளிடப்பட்ட பின்னரும், முதலாம் ஆண்டின் இறுதிவரை வேலை ஒப்பந்தம் கிடைக்காமல் தொடர்ந்து காத்திருக்கும் பணியாளர்கள் இதுவரை இரண்டாவது முறையும் மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டியிருந்தது.

எனினும், புதிய தீர்மானத்தின் அடிப்படையில், இரண்டாம் ஆண்டிற்காக மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதன்முறை செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை மட்டுமே போதுமானதாகும்.

நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக வேலை தேடுபவர்கள் செலவிடும் தேவையற்ற செலவுகளை குறைப்பதும் இந்தத் தீர்மானத்தின் பிரதான நோக்கங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )