
CIDயில் இருந்து வெளியேறிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (27) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன, விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மரண மிரட்டல் தொடர்பான ஒரு சம்பவம் குறித்து தன்னிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக வழங்கப்பட்ட அறிவித்தலை அடுத்து, CID முன் முன்னிலையானதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இடைக்கால துணை இயக்குநராக கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனின் அதிகாரப்பூர்வ பணிகள் சமீபத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்பான பதவியை வகிக்கும் அரச வைத்திய அதிகாரியாக இருந்தும், உரிய அனுமதி இன்றி பல்வேறு ஊடகங்களுக்கு கருத்துகளை வெளியிட்டு, நாட்டில் சர்ச்சையான நிலைமையையும் பொதுமக்களிடையே அசாந்தியையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

