திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று (28) திருகோணமலை நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்,பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் இன்று (28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் கடந்த 19 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரும் மறுப்பு தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவ்வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இவர்களில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன்போது, திருகோணமலை பொலிஸார் சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விடயங்களை நீதிமன்றில் முன்வைத்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )