சீனாவில் 11 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மியான்மரின் வடக்குப் பகுதியில் பாரிய இணைய மோசடிகள், ஆள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 முக்கிய உறுப்பினர்களுக்கு சீனா இன்று (29) மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

குறித்த நபர்கள் வடக்கு மியான்மரின் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கோகாங் (Kokang) பகுதியைத் தளமாகக் கொண்டு இயங்கிய இந்தக் குற்றக் குழு, 2015 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட வகையில் பாரிய குற்றச் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

“Crouching Tiger Villa” உள்ளிட்ட பல முகாம்களை அமைத்து, ஆயிரக்கணக்கான மக்களை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி இணைய மோசடிகளில் (Cyber Scams) ஈடுபடுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாண நீதிமன்றம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் போது, சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் (10 பில்லியன் சீன யுவான்) மதிப்பிலான நிதி மோசடிகளில் இந்தக் கும்பல் ஈடுபட்டிருந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், தப்பிச் செல்ல முயன்ற தொழிலாளர்கள் உட்பட 14 பேரை கொடூரமாகக் கொலை செய்தமை, பலரை கடுமையாகக் காயப்படுத்தியமை, வெளிநாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி இளைஞர்களைக் கடத்தி வந்து அடிமைகளாக வைத்துப் பணம் மோசடி செய்தமை ஆகிய குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இக்குற்றக் கும்பல் மற்றும் மியான்மரின் ஏனைய இணைய மோசடி குழுக்களால் கடந்த காலங்களில் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அதிக சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 இலங்கையர்கள், பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )