
இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் கீழ் பிரிவில், இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் சென்ற வேளையில், லக்சபான தோட்ட கீழ் பிரிவில் உயிரிழந்த நிலையில் கருப்பு நிற சிறுத்தையொன்று கிடப்பதை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக தோட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து, தோட்ட அதிகாரி இந்த சம்பவத்தை நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதன் பேரில், வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த கருஞ்சிறுத்தையை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கருஞ்சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

