
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 தொடர்பில் சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக குழு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும், இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடைமுறைக்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு இந்தத் தொகை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமல், தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய வழங்கப்படுவதாகவும், இதனை எந்தவொரு நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ரூ.200 தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று வருட காலத்திற்காக தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தக் காலம் முடிவடைந்ததும் இக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குழுவுக்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்க நிதி என்பதால் நிதி ஒழுக்கம் இன்றி தனியார் நிறுவனங்களில் சம்பளம் வழங்குமாறு கொடுப்பது பொருத்தமில்லையென குழுத்தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தொகை 2026 வரவுசெலவுத்திட்டத்தில் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இக்கொடுப்பனவை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய இந்தக் கொடுப்பனவு ‘அபிவிருத்தி மானியமாக’ காண்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அபிவிருத்தி மானியமானது உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதால், இந்தக் கொடுப்பனவை உற்பத்தி ஊக்கத்தொகை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என திறைசேரியின் பிரதிச் செயலாளர் தெரிவித்தார்.
இருந்தபோதும், நடைமுறையில் ஜனவரி மாதத்தில் இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவில் அல்லது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதற்கான தேவை தொடர்பில் குறிப்பிடப்படவில்லையென்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது.
அத்துடன், நாளொன்றுக்கு ரூ.200 வீதம் வழங்கப்படும் கொடுப்பனவு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணிப்பீட்டிற்கு உட்படாமல் இருப்பது சட்டத்திற்கு ஏற்புடையதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, இந்த விடயத்தில் காணப்படும் இதுபோன்ற சிக்கலான பகுதிகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும், இந்தக் கொடுப்பனவு தொடர்பாக சட்டரீதியான கட்டமைப்பொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி கூடியதுடன், இதில் பிரதியமைச்சர்களான சத்துரங்க அபேசிங்ஹ, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளின் கீழ் இதுவரை சுமார் ரூ. 24.4 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்தல், வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான மானியங்களுக்கான கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எனினும், சேத மதிப்பீடு மற்றும் நில அடையாளம் காணல் போன்ற செயல்முறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைப்புச் செய்தல் மற்றும் வாடகை தொடர்பான நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த நடவடிக்கைகள் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் செயல்முறையையும் அதிகாரிகள் விளக்கினர்.
நிவாரண உதவிகளை நாடுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குழு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர், மேலும் உதவி, குறிப்பாக வீட்டுவசதி, விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தித்வா சூறாவளிக்குப் பிறகு பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் கோரிக்கைகள் காரணமாக நிதி தீர்க்க வேண்டியுள்ள காப்புறுதி உரிமைகோரல்களுக்காக மறுகாப்புறுதித் தொகையை விடுவிக்க வேண்டியதன் தன்மை குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
தற்போது NITF இலிருந்து எதிர்பார்க்கப்படும் மதிப்பிடப்பட்ட காப்புறுதி உரிமைகோரல்கள் ரூ. 11 பில்லியன் ஆகும் என்பதுடன், NITF இன் ஆபத்து வெளிப்பாடுகள் 2023 முதல் ஒரு சர்வதேச மறுகாப்பீட்டாளருடன் மறுகாப்பீடு செய்யப்படாவிட்டாலும், தற்போதுள்ள கோரிக்கைகளை அவர்கள் தீர்க்கும் திறன் கொண்டவர்கள் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை ஈடுசெய்வதற்கு திறைசேரியில் குறிப்பிடத்தக்க அளவு தொகை இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்படுத்தக்கூடிய தொகை சுமார் ரூ. 750 பில்லியன் என்றும் தெரியவந்தது.
டிசம்பரில் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் காரணமாக நிதி இருப்பு இந்த அளவிற்குக் குறைக்கப்பட்டதாகவும், இருப்புக்கள் குறைக்கப்பட்டதால், டிசம்பர் இறுதிக்கும் ஜனவரி நடுப்பகுதிக்கும் இடையில் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவது அதிகரித்துள்ளதாகவும், இதனால் அந்தக் காலப் பகுதியில் வட்டிச் செலவுகள் அதிகரிப்பைப் பாதித்துள்ளதாகவும், இப்போது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தெரியவந்தது.
அரசாங்கத்தின் வருடாந்த வட்டி செலவைவிட இந்த இருப்பினை முதலீடு செய்வதினால் கிடைக்கும் நன்மை நூற்றுக்கு 2-3 வீதம் குறைவாக இருப்பதாகவும், நிதி இருப்பைப் பேணும்போது சந்தர்ப்பச் செலவு காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.
பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 14 மாதங்களாக நிறுவப்பட்ட இந்த அலுவலகத்தின் (PDMO) மொத்த பணியாளர் ஆட்சேர்ப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளமையும் இங்கு அவதானிக்கப்பட்டது.
இந்த அதிகாரிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது.
மத்திய வங்கியின் ஏல முறை தற்போது பொது படுகடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் அலுவலகம் முழு செயல்பாட்டு சுதந்திரத்துடன் செயல்பட ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு கடன் இருப்பு ரூ. 31 ட்ரில்லியன் என்றும், அதில் ரூ. 15.6 டிரில்லியன் திறைசேரி உண்டியல்கள் வடிவத்திலும், ரூ. 15.4 ட்ரில்லியன் திறைசேரிப் பத்திரங்கள் வடிவத்திலும் உள்ளன என்பதை அரசாங்க நிதி பற்றிய குழு அவதானித்தது. அந்த மொத்தக் கடனின் சராசரி செலவு 8.73 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் சேவைத் தேவை 2504 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதும் அவதானிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி 2100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 858 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டக் கடன்களாகவும், 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக வங்கியிடமிருந்து வரவுசெலவுத்திட்டத்திற்கான ஒத்துழைப்பாகவும், 380 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் (ADB) மற்றும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலமும் பெறப்பட உள்ளன என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அதன்படி, அந்த ஆண்டிற்கான கடனைத் தீர்க்க 400 மில்லியன் டொலர்களுக்கு மேலும் கூடுதல் வளமுகாமைத்துவ இடைவெளி இருப்பதும் அவதானிக்கப்பட்டது.

