சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ எனப்படும் ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக இதுவரை 89 சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை தற்போதைய அரச பொறிமுறையின் கீழ் நாட்டிற்கு கொண்டு வர முடிந்ததாக தெரிவித்தார்.

அதேவேளை, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபரையும் உள்ளடக்கி மொத்தம் 14 பேரை நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிவப்பு அறிவித்தல் இல்லாத சந்தர்ப்பங்களில், அந்தந்த நாடுகளின் குடிவரவு–குடியகல்வு சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் குறித்த நாடுகள் வைத்திருந்த நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் நாடு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டிலும் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )