ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ‘நேரடிப் போர்’ பிரகடனம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ‘நேரடிப் போர்’ பிரகடனம்

பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரம் கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தலிபான் அரசு பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், “எங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டது. தற்போது எங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டது” என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு Operation ‘Ghazab lil Haq’ என்று பெயரிட்டுள்ளது.

நேற்று (26) இரவு, தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன.

அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.

தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு அறிவித்தது

இதற்குப் பதிலடியாகவே தலிபான்கள் நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதலை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )