
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
ஈரான் ,அணுசக்தித் திட்டம் குறித்த புதிய ஒப்பந்தத்திற்கு மார்ச் மாத தொடக்கத்திற்குள் ஒப்புதல் வழங்காவிட்டால் , ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இதன்காரணமாக, ஈரானின் அணுசக்தி மையங்களை பரிசோதிக்க அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஈரானிடம் கோரியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இந்த பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினரை அங்கிருந்து வெளியேற அமெரிக்கா நேற்று (27) அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் அனுமதியைப் பெற்ற பிறகு, அவசியமற்ற ஊழியர்கள் மற்றும் தூதரக ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஏற்கனவே பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானும் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ‘பாதுகாப்பு அபாயத்தை’ கருத்தில் கொண்டே, அமெரிக்க தூதரக ஊழியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது குடிமக்களை இஸ்ரேல் மற்றும் கிழக்கு ஜெருசலேத்திற்கு பயணம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜேர்மனி அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தனது குடிமக்களிடம் பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள தனது குடிமக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், ஈரானில் உள்ள தனது குடிமக்களை ‘முடிந்தவரை விரைவில்’ வெளியேறுமாறும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
தனது தூதரக ஊழியர்களை ஈரானிலிருந்து தற்காலிகமாக ஐக்கிய இராச்சியம் வெளியேற்றியுள்ளது.

