
ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு சீனா பலத்த ஆதரவு
மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர்ச் சூழல் பரவி வரும் பின்னணியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சீனாவின் ஆதரவு உண்டு எனச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சிக்கும் (Abbas Araghchi) இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த கருத்துக்கள் பகிரப்பட்டதாகச் சீன அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால நட்புறவை மதிப்பதாகத் தெரிவித்த வாங் யீ, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதுணையாக இருக்கும் என வலியுறுத்தினார்.
ஈரானின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் சீனா எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தமது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பதற்ற நிலை மேலும் அதிகரிப்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போருக்குள் தள்ளப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனா இதன்போது வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

