
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்19 இலங்கையர்கள் பாதுகாப்பு வலயங்களுக்கு மாற்றம்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தற்போது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக, பெய்ரூட் தலைநகரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்களைப் பாதுகாப்பு வலயங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் இப்பிராந்தியத்தில் போர்ச் சூழல் மிகவும் தீவிரமடைந்துள்ளது.
இன்று மாலை ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளியில், பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன .
அங்கு தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகையினால் சூழப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் நாட்டுச் செய்தி நிறுவனமான NNA தெரிவித்துள்ளது.

