
ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் காலை சக்திவாய்ந்த வெடிப்பு
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய உள்நாட்டு விமான நிலையமான மெஹ்ராபாத் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கிருந்த பல விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகைமூட்டம் கிளம்புவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தின் பல பகுதிகள் எதிரிகளின் இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளதை ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கு முன்னர், மார்ச் 4-ஆம் திகதியும் இஸ்ரேல் இந்த விமான நிலையத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருந்தது. அப்போது ஹெலிகாப்டர் உற்பத்திப் பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டிருந்தன.

