ஈரானின் புதிய உயரிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்

ஈரானின் புதிய உயரிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உயரிய தலைவராக (Supreme Leader) அவரது இரண்டாவது புதல்வர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1969 செப்டம்பர் 8 அன்று ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாட்டில் பிறந்தார். இவர் அலி கமேனியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர்.

தெஹ்ரானில் உள்ள மதப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், 1999 இல் ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் புனித நகரமான ‘கோம்’ (Qom) நகருக்குச் சென்று தனது மதக் கல்வியைத் தொடர்ந்தார்.

ஈரான் – ஈராக் போரின் போது, தனது 17வது வயதில் குறுகிய காலம் இராணுவத்தில் பணியாற்றியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மொஜ்தபா கமேனி ஒரு அமைதியான சுபாவம் கொண்டவர். அவர் இதுவரை எவ்வித அரச பதவிகளையும் வகிக்கவில்லை. பொதுக்கூட்டங்களில் பேசுவதோ அல்லது நேர்காணல்கள் வழங்குவதோ இல்லை என்பதால் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன.

உத்தியோகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காவிட்டாலும், பல ஆண்டுகளாக ஈரானில் திரைமறைவில் அவர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 28ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவரது தந்தையும் ஈரானின் ஆன்மீகத் தலைவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அத்தாக்குதலில் அலி கமேனியின் மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தின.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )