
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவன ஈர்ப்பு ஊர்வலம்
மட்டக்களப்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு சார்பில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு ஊர்வலமும், கையெழுத்து போராட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்வின் மூலம் 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழு உடனடியாக செயல்பட வேண்டும் என்பதையும், பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அனர்த்தமுகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகத்தினர், பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டு, மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா வரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின், 1800க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை சேகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மகஜர் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் மற்றும் அதன் வேதனைகள் உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு, யுத்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானமும் நீதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

