
மோட்டார் சைக்கிள் விபத்து ; 20 வயது இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (08) காலை பதிவாகியுள்ளது. கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் பின்னால் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

