இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (24) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.

பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு முக்கிய துறைகள் குறித்து அவர் கருத்துகளை முன்வைத்தார்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது, கடந்த காலப் போர்ச் சூழ்நிலையால் பலரது காணி ஆவணங்கள் அழிந்துவிட்டன.

இதனால் மக்களுக்கும் அரச திணைக்களங்களுக்கும் உரிய பதிவுகள் இல்லாத நிலை உருவாகி, காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘ஹிமிகம’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஒற்றைச் சாளர முறைமை அமைத்தல், காணி விடுவிப்பு மற்றும் முரண்பாடுகளைத் தீர்க்க தொழில்நுட்ப ஆதரவு பெறுதல் ஆகியவை அவசியம் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் சவால்களை ஆளுநர் நுட்பமாக கையாளுவதைப் பாராட்டினார்.

அண்மைய வெள்ளப் பேரிடரின்போது அரசாங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய சேவையையும் அவர் பாராட்டினார்.

UNICEF உள்ளிட்ட ஐ.நா. முகவர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரண உதவிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

உலகளாவிய பொருளாதார சூழ்நிலையால், இலங்கை போன்ற நாடுகளுக்கான நேரடி நன்கொடைகள் குறைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதி வாயில்கள் மூலம் உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்துக்கான முதலீடுகளை ஈர்க்க அதிகாரப்பூர்வ நடைமுறைகளில் உள்ள தாமதங்கள் தடையாக உள்ளன என்றும், அதனைத் தீர்க்க வினைத்திறனான ஒற்றைச் சாளர முறைமையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனை விரைவாக நிறைவு செய்ய கூடுதல் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் மாகாண நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )